jagan mohan reddy, Ambati Rayudu
jagan mohan reddy, Ambati Rayudu atr twitter
இந்தியா

ஆந்திர அரசியலில் அதிரடி காட்ட தயாராகும் அம்பத்தி ராயுடு? விரைவில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2018ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் ஐபிஎல்லிருந்தும் ஓய்வுபெற்றார். இதையடுத்து, அவருடைய அடுத்த இன்னிங்ஸ் என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் இணையதளங்களில் கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர்.

இந்தச் சூழலில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, அடுத்து அரசியலில் களமிறங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே, ”கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன்” என அம்பத்தி ராயுடு சொன்னதை அடுத்து, அவரது ரசிகர்கள் எல்லாரும் அவர் அரசியலுக்குள் கட்டாயம் நுழையப் போகிறார் என கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும் சந்தித்திருப்பதும் அதற்கு உதாரணமாய்ப் பேசப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ, அக்கட்சியில் இணைந்துவிட்டதாகச் சொல்கின்றனர். இதில் எது உண்மை என்று இதுவரை தெரியவில்லை.

ஆனால், 90 சதவிகிதம் ராயுடு ஆளும் முதல்வரின் கட்சியில் இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். ராயுடு சமீபத்தில் முதல்வரைப் பாராட்டி வெளியிட்டிருந்த பதிவுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும், அவரது தூரத்து உறவினர் ஒருவர் ஆளும் அரசில் கேபினட் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் ராயுடு அக்கட்சியில் இணைவார் என ஆரூடம் கூறுகின்றனர். அதேநேரத்தில், முன்னாள் இந்திய கேப்டனும், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீனும் அம்பத்தி ராயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியிலும் அவர் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ராயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை கட்சியில் சேர அழைக்கும் பணியை, முன்னாள் எம்.பி., அசாருதீனுக்கு, கட்சி தலைமை வழங்கியுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில் சீட்டு வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராயுடுவுக்கு அங்குள்ள மக்களின் ஆதரவு கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர்.

ஒருவேளை ராயுடுவும் கட்சியில் இணைந்தால், அரசியலில் நுழைந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலிலும் இடம்பிடிப்பார். இதற்குமுன்பு இந்திய கிரிக்கெட்டில் ஜொலித்த மறைந்த மன்சூர் அலி கான் பட்டோடி, கீர்த்தி ஆசாத், அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து, சேத்தன் சவுகான், கௌதம் கம்பீர் ஆகியோரும் அரசியல் களத்தில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.