இந்தியா

சட்டவிரோத கடன் செயலிகளுக்கு கிடுக்குப்பிடி - நிதியமைச்சர் எடுத்த முக்கிய முடிவு!

சட்டவிரோத கடன் செயலிகளுக்கு கிடுக்குப்பிடி - நிதியமைச்சர் எடுத்த முக்கிய முடிவு!

webteam

சட்டவிரோத கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக சட்ட விரோத கடன் செயலிகளின் மிரட்டல் தொல்லை காரணமாக பல தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகைய சட்ட விரோத கடன் செயலிகளை ஒழிக்க உத்தரவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோர்களில் இடம் பெற முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத கடன் செயலிகள் ஆப் ஸ்டோர்களில் இடம்பெறுவதை மத்திய ஐ.டி அமைச்சகம் தடுத்து நிறுத்தும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் சட்டவிரோத கடன் செயலிகள் மிரட்டலை தடுக்க இன்று ( செப். 9 வெள்ளிக்கிழமை) உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்தினார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். பிளாக்மெயில் மிரட்டல், கைபேசி விவரங்களை கைப்பற்றி அதன் மூலம் அவதூறு பரப்புவது, ஆபாச போட்டோக்களை வெளியிடுவதாக துன்புறுத்தி பணம் பறிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

சட்டவிரோதமாக வெளிப்படைத்தன்மை இல்லாத வகையில் கட்டணங்கள் வசூலிப்பது மற்றும் பிராசசிங் கட்டணம் என்கிற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது போன்றவை இத்தகைய செயலிகள் மீது அளிக்கப்படும் புகார்களில் அடக்கம். வரி இணைப்பு, பினாமி நிறுவனங்களை பயன்படுத்துவது, பதிவு பெறாத டிஜிட்டல் கட்டண பரிமாற்ற அமைப்புகளை பயன்படுத்துவது, கருப்பு பணத்தை கையாள்வது போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இத்தகைய செயலிகள் ஈடுபடுகின்றன. இதனால் விரக்தி மற்றும் பயம் காரணமாக பலர் பரிதாபமாக தற்கொலை செய்து கொள்வது தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. இத்தகைய செயலிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

சட்டவிரோத கடன் செயலிகள் பயன்படுத்தும் பினாமி வங்கிக் கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை அளித்துள்ளார். இணையதளம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் டிஜிட்டல் அமைப்புகள் இத்தகைய சட்டவிரோத செயலிகளை பயன்படுத்தினால் அந்த அமைப்புகளையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு பெறாத அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் உயர் மட்ட ஆலோசனைக்கு பிறகு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைப்புகள் சட்டவிரோத செயலிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சகம் பரிந்துரை அளித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. சட்ட விரோத கடன் செயலிகள் ஏழை மக்களை ஏமாற்றி பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதேபோல் இத்தகைய செயலிகள் பயன்படுத்தும் பினாமி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கார்ப்பரேட் அஃபையர்ஸ் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் பல சட்டவிரோத கடன் செயலிகளை சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் திரைமறைவில் நடத்தி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்.