இந்தியா

கேரளா: மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர் வெட்டிக் கொலை - கண்ணூரில் பதற்றமான சூழல்!

ஜா. ஜாக்சன் சிங்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கே. ஹரிதாஸ் (54). மீனவரான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஆவார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டருகே பதுங்கியிருந்த மர்ம கும்பல், அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

ஹரிதாஸின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அவரது சகோதரர், அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், அந்த கும்பல் அவரையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஹரிதாஸ் உயிரிழந்தார். அவரது சகோதரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஹரிதாஸை கொலை செய்தது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், ஹரிதாஸ் கொலையை கண்டித்து கண்ணூரில் உள்ள கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டன. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 8 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் கண்ணூரில் உள்ள ஒரு கோயில் திருவிழாவின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.