Cow
Cow file image
இந்தியா

எதிரிகளைப் பழிவாங்க பசுவதை வழக்கு: முஸ்லிம் நபர்களை சிக்கவைத்த இந்து மகாசபை!

Prakash J

இதுகுறித்து ஆக்ரா காவல் துறை உதவி ஆணையர் ஆர்.கே.சிங், “மகாசபா தலைவரான ஜிதேந்திர குமார் என்பவர் கடந்த மார்ச் 30ஆம் தேதி காவல் துறையிடம், ’கல்தா என்ற ரிஸ்வான் மற்றும் அவரது மகன்கள் நக்கீம், சோட்டு என்கிற விஜ்ஜு, ஷானு ஆகியோர் பசுவை அறுத்து, கவுதம் நகரில் உள்ள முட்புதர் அருகே இறைச்சியை விற்க திட்டமிட்டுள்ளனர்’ என புகார் அளித்துள்ளார்.

பசு

மேலும் அவர், தன் நண்பர்களான விஷால் மற்றும் மணீஷ் பண்டிட் ஆகியோருடன் அவர்களைப் பிடிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும், தங்களைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்’ என போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்பேரில், பசுவதை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் ரிஸ்வான் மற்றும் அவரது மகன்கள் மீது எத்மதுலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டனர். பின்னர், அவர்களில், இம்ரான் குரேஷி என்கிற தாக்கூர் மற்றும் ஷானு என்கிற இல்லி ஆகிய இருவரை ஆக்ரா போலீசார் கைதுசெய்தனர்.

அதைக் காரணமாக வைத்து அந்த முஸ்லிம் நபர்களை இந்த வழக்கில் சஞ்சய் சிக்க வைத்துள்ளார். விசாரணையின்போது ஜிதேந்திர குமார் எங்களிடம் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆர்.கே.சிங், ஆக்ரா காவல் துறை உதவி ஆணையர்

ஆனால், விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இந்தக் குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் மகாசபா தேசிய செய்தித் தொடர்பாளரான சஞ்சய் ஜாட்தான் முக்கியமானவர் என விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட நபர்களுடன் ஏற்கெனவே சஞ்சய் ஜாட்டுக்கு விரோதம் இருந்துள்ளது. அதைக் காரணமாக வைத்து அந்த முஸ்லிம் நபர்களை இந்த வழக்கில் சஞ்சய் சிக்கவைத்துள்ளார். விசாரணையின்போது ஜிதேந்திர குமார் எங்களிடம் பொய் சொன்னது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும், சஞ்சய் உள்ளிட்டோரும் மாடு வதை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் தெரியப்படுத்துகின்றன.

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்.
ஆர்.கே.சிங், ஆக்ரா காவல் துறை உதவி ஆணையர்

ஆனால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர்கள் யாரும் ஒரு மாதத்திற்கு மேலாக அந்த இடத்திற்கு செல்லவில்லை என்பதையும் சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், பொய்யான தகவல் கொடுத்த இந்து மகாசபை தலைவர் மற்றும் உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருகிறோம் என்றார். பொய்யான குற்றச்சாட்டின் பேரில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் இந்த வழக்கில் தன்னையும் தன் கூட்டாளிகளையும் போலீசார் பொய் வழக்கு போட்டு சிக்கவைத்துள்ளதாக சஞ்சய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”போலீசார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். சிலர், வேண்டுமென்றே எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர். வழக்கை வேறு பக்கம் திருப்ப முயல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில், “ராம நவமியை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பசு வதை செய்யப்பட்டுள்ளது. அப்போது இதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன. அவர்கள் சில அப்பாவிகளை சிக்க வைக்க முயன்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முஸ்லிம்களுக்கு எதிராக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில், மகாசபை உறுப்பினர்கள் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் சஞ்சய் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து அவரும் அவரது நண்பர்களும் அடிக்கடி மாட்டிறைச்சி கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தி, காவல் துறையில் வழக்குப் பதிவு செய்து மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கின்றனர்.