பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில், பசுக்களை கடத்துபவர்கள், கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அம்மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பசுவை இறைச்சிக்காக விற்கத் தடை விதித்து மத்திய அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு கேரளா, திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இருப்பினும், மத்திய அரசின் நடைமுறைகளை பாஜக ஆளும் மாநில அரசுகள் மட்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில், பசுக்களை கடத்துபவர்கள், கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அம்மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் உத்தரவிட்டுள்ளார். லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய சுல்கான் சிங் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் மூன்று மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.