20 தங்க சங்கிலியை பசுமாடு விழுங்கியதை அடுத்து, அதற்கு அறுவைச் சிகிச்சை செய்து மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள நந்திடாலே கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிந்தர பட். விஜயதசமி அன்று தனது வீட்டில் பூஜை செய்தார். மலர் மாலையால் சாமிகளை அலங்காரம் செய்திருந்த பட், சாமிக்கு தனது 20 கிராம் தங்கச் சங்கிலியை வைத்தும் பூஜை செய்தார்.
மறுநாள், அந்த மலர் மாலைகளை தனது பசுவுக்கு உணவாகக் கொடுத்தார். மென்று தின்றது பசு. பிறகுதான், மலர் மாலைகளோடு சேர்த்து தங்கச் சங்கிலியையும் மாடு தின்று விட்டது என்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பட், என்ன செய்யலாம் என்று யோசித்தார். அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று விஷயத்தைச் சொன்னார். மருத்துவர் தயானந்த், ’பசுவைத் தொடர்ந்து கண்காணியுங்கள். அதன் சாணியோடு வெளிவந்துவிடும். வராமல், மாடு சுணக்கமாக இருப்பது தெரிந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வோம்’ என்றார்.
இதையடுத்து மாட்டை வீட்டிலேயே கட்டிப்போட்டு, சாணி போடும்போது அதில் தங்கச்சங்கிலி இருக்கிறதா? என்று தேடினார். கிடைக்கவில்லை. இதனால் மருத்துவர் தயானந்திடம் மீண்டும் சென்றார். பின்னர் பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த சங்கிலியை மீட்டுள்ளனர்.
இதுபற்றி மருத்துவர் தயானந்த் கூறும்போது, ‘மாடுகளுக்கு வயிற்றில் நான்கு பிரிவு இருக்கும். மாடு முதலில் சாப்பிடும் உணவு, இரண்டு பிரிவுக்குச் செல்லும். ஓய்வு எடுக்கும்போது அதில் இருக்கும் உணவை, அசைபோடும். அப்போது அது மற்றப்பிரிவுக்குச் செல்வது போல அதன் வயிறு அமைந்துள்ளது. அதன்படி சங்கிலி எங்கு இருக்கிறது என்பதை கணித்து புதன்கிழமை ஆபரேஷன் செய்து அதை வெளியே எடுத்தோம். இப்போது பசு நலமாக இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முழுவதுமாக குணமடைந்துவிடும்’ என்றார்.
தங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவை அந்தப் பகுதியினர் அதிசயமாகப் பார்த்து விசாரித்துவருகின்றனர்.