ஹரித்வாரில் நடைபெற உள்ள கும்பமேளா விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு கட்டாயம் தேவை என உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.குறிப்பாக மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கும்பமேளா நடைபெறும் எனவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
விழாவிற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு விழாவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற உள்ள இந்த விழாவில் சாதாரண நாட்களில் 10 லட்சம் பேரும், முக்கிய நாட்களில் 50 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வருபவர்கள் அனைவரும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொண்ட RT-PCR கொரோனா சோதனை முடிவை எடுத்து வர வேண்டுமெனவும் அரசு தெரிவித்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விழாவுக்கு வருவதை தவிர்க்குமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.