இந்தியா

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளா, மகாராஷ்டிராவுக்கு விரையும் மத்தியக் குழு!

webteam

கேரளா, மகாராஷ்டிராவில் கொவிட்-19 மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்காக மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட அந்த மாநிலங்களுக்கு இரண்டு உயர்மட்ட குழுக்களை விரைந்து அனுப்ப மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வரும் சூழலில், கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதத்தினர் இந்த இரண்டு மாநிலங்களை மட்டுமே சேர்ந்தவர்கள்.

மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும், திருவனந்தபுரத்தின் சுகாதார, குடும்ப நலத்திற்கான மண்டல அலுவலகத்தின் வல்லுநர்களும், டெதுதில்லி லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியின் வல்லுநர்களும் கேரளாவிற்குச் செல்லவுள்ள குழுவில் இடம்பெறுவார்கள்.

மத்திய குழுவினர், மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கள நிலவரத்தை அறிந்து, பாதிப்புகளைக் குறைப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரை செய்வார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் 100-க்கும் குறைவாக பதிவு

தேசிய அளவில், எட்டரை மாதங்களுக்குப் பிறகு கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 100-க்கும் குறைவாக பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி 95,735 ஆக இருந்த பாதிப்பு, இன்று 8,635 ஆகக் குறைந்துள்ளது. கடந்த எட்டு மாதங்களில் ஏற்பட்ட பாதிப்பில் இது மிகவும் குறைந்ததாகும்.

அன்றாட சராசரி தொற்று பாதிப்பு கடந்த ஐந்து வாரங்களில் வெகுவாகக் குறைந்து வருகிறது. டிசம்பர் 30, 2020 - ஜனவரி 5, 2021 வரையிலான காலகட்டத்தில் 18,934 ஆக இருந்த தினசரி சராசரி பாதிப்பு, ஜனவரி 27- பிப்ரவரி 2 வரையிலான காலகட்டத்தில் 12,772 ஆகக் குறைந்துள்ளது.

மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த எட்டரை மாதங்களில் இதுவே குறைந்த எண்ணிக்கையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மே 15-ஆம் தேதி 100 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,516 முகாம்களில் 1,91,313 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 72,731 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,423 பேர் குணமடைந்துள்ளனர். 85.09 சதவீத புதிய பாதிப்புகள் 10 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன. தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,215 பேர் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர். நேற்று கேரளாவில் 3,459 பேரும், மகாராஷ்டிராவில் 1,948 பேரும், தமிழகத்தில் 502 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கொவிட்-19 மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அங்கு விரைந்து அனுப்பியுள்ளது.