இந்தியா

கொரோனா அச்சம் எதிரொலி: டெல்லியில் கல்லூரிகள், திரையரங்குகள் மூடல்..!

கொரோனா அச்சம் எதிரொலி: டெல்லியில் கல்லூரிகள், திரையரங்குகள் மூடல்..!

webteam

டெல்லியில் மார்ச் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசு அலுவலங்களில் பயோமேட்ரிக் எனப்படும் கைரேகைப் பதிவேடு நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கைரேகைப் பதிவேடுகள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் கொரோனா பாதிப்பின் நிலவரத்தை பொறுத்து அங்கு மீண்டும் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக கொரோனா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட அங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் சபரிமலைக்கு பக்தர்கள் நோய் அறிகுறியுடன் வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திராவில் திருப்பதி கோயிலுக்கும் பக்தர்கள் நோய் அறிகுறியுடன் வர வேண்டாம் என தேவஸ்தானம் போர்டு அறிவித்திருக்கிறது.