பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் கோவிட் 19 கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை, 2 - 18 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்துவது தொடர்பாக 2 அல்லது 3-வது கட்ட ஆய்வுகளை தொடங்கலாம் என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
இதற்கான ஆய்வுகள், டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ் உட்பட இந்தியா முழுக்க 525 இடங்களில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முதற்கட்டமாக இரண்டாவது கட்ட ஆய்வும், அதன் முடிவு குறித்த அறிக்கை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், மூன்றாவது கட்ட ஆய்வும் தொடங்குமென சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இந்த ஆய்வு ஒரேகட்டமாக 2 - 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செய்யப்பட்டு வரும் சூழலில், நூறு சதவிகித செயல்திறன் கொண்டதாக சொல்லப்படும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, இப்போதைக்கு 12 -15 வயதினர் என்று மட்டுமே பிரித்து ஆய்வு நடத்தியுள்ளது. பிற வயதினருக்கு இனிவரும் காலங்களில்தான் சோதனைகள் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பைசர் சார்பில் ஆய்வுக்குட்படுத்தபட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு, அந்த தடுப்பூசியை விநியோகிக்க நேற்று அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன், "மாநிலங்கள் அனைத்தும், உங்கள் இடத்திலிருக்கும் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி கிடைப்பதற்கான வழிகளை கண்காணியுங்கள்" எனக்கூறியிருந்தார்.
பைசர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ள தகவலில், கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக இருப்பது தெரியவந்ததாக சொல்லப்பட்டது. இதற்கான விநியோகிக்கும் பணிகள், நாளை (மே 13) முதல் தொடங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிக மோசமான பாதிக்கப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையில், முந்தைய அலையை விடவும் அதிகமாக குழந்தைகள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலை, அடுத்து வரவிருக்கும் மூன்றாவது அலையில் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. அப்படியான சூழலில் இந்தியாவில் மேற்கூறிய இந்த தடுப்பூசி ஆய்வுகள் வெற்றியடையடைந்தால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கு முன்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு, அவர்களை நம்மால் காக்க முடியும். இதை இதற்கான பணிகள் இந்தியாவில் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.