இந்தியா

பூனைக்குட்டிக்காக 20 நாட்களாக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தம்பதி

Rasus

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தம்பதி குழந்தைபோல் வளர்த்து வந்த பூனையை தொலைத்துவிட்டு, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.

சூரத்தைச் சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன் பூனைக்குட்டி ஒன்றுக்கு பாபு என பெயர் சூட்டி தங்கள் குழந்தைபோல் வளர்த்து வந்தனர். ஆசையாய் வளர்த்து வந்த பூனைக் குட்டியுடன், அந்தத் தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த 9-ஆம் தேதி சென்றுள்ளனர். தரிசனம் முடித்து ஊர் திரும்புவதற்காக 13-ஆம் தேதி ரேணிகுண்டா ரயில் நிலையம் சென்றபோது, பூனைக்குட்டி பா‌புவை அடையாளம் தெரியாத நபர்கள் தூக்கிச் சென்றுவிட்டனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பூனைக்குட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அங்குள்ள கடைக்காரர்களிடம் காட்டி விவரம் கேட்டுள்ளனர். அதனைப் பயன்படுத்தி சிலர், பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி சூரத் தம்பதியிடமிருந்து 50,000 ரூபாய் வரை பணம் பறித்துள்ளனர். 

இது குறித்து ஓட்டுநர்கள் சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க, பூனையை மீட்டபின் தகவல் கொடுப்பதாகக் கூறி அந்தத் தம்பதியை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். அதனை ஏற்காத ஜியாஸ் - மீனா தம்பதி, குழந்தை போல் வளர்த்த பூனைக்குட்டி பாபு கிடைக்கும் வரை ஊருக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி ரேணிகுண்டா ரயில் நிலையத்திலேயே 20 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர்.