ஹிமாச்சல பிரதேசம் சாம்பா அருகே பர்மலாவில் கனமழையால் சாலையில் வெள்ளம் சுனாமி போல் பாய்ந்தது. அந்த வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞரை, காரில் வந்த புதுமனத் தம்பதியினர் துப்பட்டாவை கயிறாக கட்டி வீரவீரமாக மீட்டனர். மாம்லா கிராமத்தை சேர்ந்த இளைஞரை காப்பாற்றிய இந்த மனிதநேய செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளை குவிக்கிறது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
மிகப்பெரிய இயற்கை பேரிடர்கள் நடக்கும்போது தான், மனிதர்களின் இயல்பான குணம் வெளியே வரும் என்று சொல்வார்கள். இந்த உண்மையான குணத்தை வெளிப்படுத்த தான் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறதோ என்ற எண்ணம் கூட சில சமயங்களில் எழாமல் இல்லை. குறிப்பாக, சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய வெள்ளத்தின்போது, பலரும் யாரென்றே தெரியாத பலருக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்து, மனிதத்தின் உன்னதத்தை உலகிற்கே எடுத்துக் காட்டியிருந்தனர்.
இவ்வாறு மனிதர்கள் மத்தியில் இன்னும் எஞ்சியுள்ள மனித நேயத்தை, வெள்ளம் ஒன்று வெளிக் கொண்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதாவது, தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருப்பதால், வடமாநிலங்களில் மிக கனமழை பெய்து, பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, ஹிமாச்சல பிரதேசத்தில் பெருமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் சாம்பா பகுதியில் உள்ள பர்மலாவில், கனமழை பெய்து, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. திடீரென வெள்ளத்தின் வேகம் சுனாமி போல் பலமடங்கு அதிகரித்து, சாலையில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து தள்ளியுள்ளது.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர், அந்த வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். அப்போது சாலையோரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர், யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், காரில் வந்த புதுமனத் தம்பதியினர், அந்த இளைஞரை கண்டதும், வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பின்னர், காரில் இருந்த பெண்கள், தங்களது துப்பட்டாவை கயிறு போல் உருவாக்கி, இளைஞரிடம் கொடுத்து, அவரை பத்திரமாக மீட்டனர். மாம்லா கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞரை, பத்திரமாக புதுமனத் தம்பதியினர் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த புதுமனத் தம்பதியையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.