இந்தியா

மாற்று சமூக காதலனால் கர்ப்பம் : இளம்பெண்ணை கொன்ற பெற்றோர் கைது

மாற்று சமூக காதலனால் கர்ப்பம் : இளம்பெண்ணை கொன்ற பெற்றோர் கைது

webteam

தெலங்கானாவில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து கர்ப்பமான மகளை பெற்றோரே கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜொகுலம்பா காட்வால் மாவட்டத்தில் உள்ள சாந்திநகர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாஸ்கர் ஷெட்டி மற்றும் வீரம்மா. இவர்களுக்கு 20 வயது இளம்பெண் ஒருவர் இருந்தார். அப்பெண் ஆந்திராவிற்கு அருகே உள்ள குர்னூல் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால் அப்பெண் வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் பரிசோதனை செய்தனர். அப்போது அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும், அதனால் தான் இந்த நிலை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அந்த மாணவர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை உடனே கருவை கலைத்துவிடுமாறு பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார். இதையடுத்து பெண்ணை அழைத்துக்கொண்டு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். வீடு வந்ததும் அப்பெண்ணை திட்டியதுடன், அடித்ததாக தெரிகிறது. பின்னர் அடுத்த நாள் காலை(ஞாயிற்றுக்கிழமை) அப்பெண் தூங்கிக்கொண்டிருந்த போது, தாய் தந்தை இருவரும் முகத்தில் தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் தங்கள் மகள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து வந்த போலசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அப்பெண் மூச்சடைத்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதும், உண்மைகள் வெளிவந்தன. பின்னர் பெற்றோரை கைது செய்த போலீஸார் அவர்களை 14 நாட்கல் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.