இந்தியா

கர்நாடகா: காவிரி ஆற்றில் திருமண போட்டோஷூட் - நீரில் மூழ்கி உயிரிழந்த இளம் ஜோடி.!

கர்நாடகா: காவிரி ஆற்றில் திருமண போட்டோஷூட் - நீரில் மூழ்கி உயிரிழந்த இளம் ஜோடி.!

webteam

மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி தோணியில் அமர்ந்து போட்டோஷூட் செய்தபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

புகைப்படங்கள் நினைவுகளை பத்திரப்படுத்தும் ஒன்று. காலங்கள் கடந்தாலும் எப்போதோ எடுத்த புகைப்படங்கள் நம் கண்ணில் படும்போது நாம் அந்தக் காலத்துக்கு மீண்டும் செல்லும் உணர்வை போட்டோக்கள் உருவாக்குகின்றன. அதனால்தான் குடும்ப நிகழ்வுகளில் புகைப்படங்கள் ஒரு முக்கிய இடத்தில் இருக்கின்றன. குறிப்பாக திருமண நிகழ்வுகளில் புகைப்படங்கள் எடுப்பது என்பது ஒரு முக்கிய பகுதியாகவே இருக்கும். காலப்போக்கில் புகைப்படங்கள் என்பது அப்டேட்டாகி வருகின்றன.

திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என பல போட்டோஷூட்டுகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. வித்தியாச போட்டோஷூட் என்ற முயற்சியில் எடுக்கப்படும் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியும் வருகின்றன. இந்நிலையில் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி தோணியில் அமர்ந்து போட்டோஷூட் செய்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் மைசூரு மாவட்டத்தில் உள்ள முதுகுத்தூரில் நடந்துள்ளது.

கடந்த வாரம் சசிகலா (20) மற்றும் சந்துரு (30) ஆகியோருக்கு நிச்சயார்த்தம் நடந்துள்ளது. வரும் 22ம் தேதி திருமண தேதி முடிவுசெய்யப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முன்பான போட்டோஷூட்டை காவிரி ஆற்றில் நடத்தியுள்ளனர். மீனவர் ஒருவருடன் தோணி ஒன்றில் அமர்ந்து போட்டோஷூட்டுக்கு தயாரானபோது தடுமாறி மூவரும் ஆற்றில் விழுந்தனர். மீனவர் பத்திரமாக நீந்தி கரையேறிய நிலையில் இளம் ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை இருவரின் உடல்களை மீட்டனர்.