மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள பவானிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், யாருக்கு வெற்றி கிட்டப்போகிறது என்ற கேள்விக்கான பதிலை நாடே எதிர்பார்த்திருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றாலும், தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியை தழுவினார். இருப்பினும் மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக அவர் பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் ஆணைய விதிகளின்படி 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய நிலையில், அவர் போட்டியிட வாய்ப்பளிக்கும் வகையில் பவானிபூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சோபந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பரபரப்பான வகையில் நடந்து முடிந்துள்ளது.
மம்தா பானர்ஜியை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீஜீப் பிஸ்வாஸ் களம் கண்டுள்ளனர். ஏற்கனவே 2 முறை பவானிபூர் தொகுதி, மம்தா பானர்ஜிக்கு வெற்றித் தேடி தந்துள்ளது. ஆயினும், பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால், மம்தாவுக்கு கடும் போட்டியாகவே கருதப்படுகிறார். மம்தாவை வீழ்த்துவதற்காக மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு படைகளை பிரசாரத்தில் இறக்கியது பா.ஜ.க. தலைமை. நந்திகிராமில் விட்ட வெற்றியை பவானிபூரில் பெற்றுவிடும் வகையில் மம்தா தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காய்நகர்த்தி வரும் மம்தாவுக்கு பவானிப்பூர் இடைத்தேர்தல் வெற்றி அவசியமாகி இருக்கிறது. அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பவானிபூரில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்டோபர் 3-ஆம் தேதி பார்க்கலாம்.