பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று வெளியாகி வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், மிசோரம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.
நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று வெளியாகி வருகிறது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி மகா கட்பந்தன் கூட்டணியை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்கம் மற்றும் நக்ரோட்டா, ராஜஸ்தானில் உள்ள அந்தா, மிசோரமில் உள்ள டம்பா, ஜார்க்கண்டில் உள்ள காட்ஷிலா, தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ், ஒடிசாவில் நவ்படா மற்றும் பஞ்சாபில் உள்ள தரன் தரன் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ., 11ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
அதற்கான முடிவுகளும் இன்று வெளியாகிவருகிறது. 3 மணி நிலவரப்படி, ஒடிசாவின் நுவாபாடாவில், பாஜகவின் ஜெய் தோலாகியா 65,598 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதேபோல், ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டாவில், பாஜகவின் தேவயானி ராணா 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கானாவின் ஜூபிலி ஹில்ஸில், காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 24,729 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ராஜஸ்தானின் அன்டாவில், காங்கிரஸின் பிரமோத் ஜெயின் 15,612 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்க்கண்டின் காட்சிலாவில் ஜே.எம்.எம்-ன் சோமேஷ் சந்திர சோரன் 23,385 வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியான முன்னிலை பெற்றுள்ளார். பஞ்சாபின் டர்ன் தரனில் ஆம் ஆத்மி கட்சியின் ஹர்மீத் சிங் சந்து 12,091 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரின் புட்காமில் பிடிபி ( PDP ) யின் முன்தாசிர் மெஹ்தி 5, 240 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மிசோரம் டம்பா இடைத்தேர்தலில் 562 வாக்குகள் வித்தியாசத்தில் மிசோ தேசிய முன்னணி (MNF) இன் டாக்டர் ஆர். லால்தாங்லியானா வெற்றி பெற்றுள்ளார்.