இந்தியா

“பாஜக அரசுக்கு எதிராக என்னால் பேசவே முடியவில்லை” - சுமித்ரா மகாஜன்

webteam

பாஜகவிற்கு எதிராக தன்னால் பேச முடியவில்லை என்று மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

16ஆவது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது எம்பி பதவிகாலத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் இந்தூர் நகரின் வளர்ச்சி தொடர்பான விஷயங்களை தன்னால் வெளிப்படையாக எழுப்ப முடியவில்லை என்று சுமித்ரா மகாஜன் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர், “மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது, என்னால் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகளை எழுப்ப முடியவில்லை. என்னுடைய தொகுதியின் காங்கிரஸ் தலைவர்களை வைத்து நான் இந்தப் பிரச்னைகளை எழுப்ப சொன்னேன். அதன்பின்னர் அந்தப் பிரச்னைகளை மத்திய பிரதேச முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று சரி செய்வதாக உறுதி அளித்தேன். நான் கட்சிக்கு கட்டுபட்டு இருந்ததால் மாநில பாஜக அரசிற்கு எதிராக பிரச்னைகளை எழுப்ப முடியவில்லை. எனினும் இந்தூரின் வளர்ச்சி தொடர்பான விஷயம் நான் கட்சியை தாண்டி பிற கட்சித் தலைவர்களிடம் எழுப்ப சொன்னேன்” எனத் தெரிவித்துள்ளார். 

8 முறை மக்களவை எம்பியான சுமித்ரா மகாஜன் 75 வயதை கடந்ததால், இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.