ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியத் தொழில்துறை வரவேற்றுள்ளது.
நாடு இன்று சந்திக்கும் நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்றும் ஜம்மு- காஷ்மீரின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமிடுபவை என்றும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார். மத்திய அரசின் முடிவால் ஜம்மு- காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவர் ராஜிவ் தல்வார் கூறியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கை ஏன் இத்தனை காலமாக எடுக்கப்படாமல் இருந்தது என்றும், தேசிய சமுதாயத்தில் காஷ்மீரிக்களை அனைவரும் அரவணைக்கும் நேரம் வந்திருப்பதாகவும் மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் துலிப் மலர்த் தோட்டம் உள்பட 2 அழகிய தொழிற்சாலைகளைக் கொண்டிருந்ததாகவும் பயங்கரவாதத்தால் அவற்றை மூட நேரிட்டதாகவும் ட்விட்டரில் RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளார். இப்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீரில் முதலீடுகள் திரும்பும் என்றும், உண்மையான சொர்க்கமாக காஷ்மீர் திகழும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை பாரதிய ஜனதா நிறைவேற்றியுள்ளதாகவும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நீண்டகால விருப்பம் என்றும் JSW குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.