இந்தியா

மும்பையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு

webteam

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், மும்பையில் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சைஃபி மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு ஆக்டோஜெனேரியன் மருத்துவர் நேற்று உயிரிழந்தார். அவர் ஏற்கெனவே நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என மாநில சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைஃபி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “அவர் சைஃபி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் பணி மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பி.டி.இந்துஜா மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்தும் இடத்திற்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அவரின் நெருங்கிய உறவினர்கள் இங்கிலாந்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருந்து இவருக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சைஃபி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வெர்னான் தேசா கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதை சைஃபி மருத்துவமனை மீண்டும் வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது வழக்கில், 53 வயதான அந்தேரியைச் சேர்ந்த மருத்துவர், அவரது 43 வயது மனைவி மற்றும் 20 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் குடும்பம் வெளியில் எங்கும் செல்லவில்லை. அதனால் மருத்துவர் ஒரு நோயாளி மூலம் வைரஸுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவருடன் தொடர்பு கொண்ட 60 நோயாளிகளின் மாதிரிகளை எம்.சி.ஜி.எம் எடுத்துள்ளது. இதுகுறித்து உதவி ஆணையர் விஸ்வாஸ் மோட் கூறுகையில், "இப்போதைக்கு, அவரின் எந்த நோயாளிக்கும் கொரோனா பாசிடிவ் இல்லை" எனத் தெரிவித்தார்.

வக்கோலாவில் பயிற்சி பெற்ற மற்றொரு மருத்துவருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தாலிக்கு சென்று வந்த ஒரு நபருடன் தொடர்பு கொண்ட பிறகு அவர் சோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது.