டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் சிகிச்சை பெற்ற மற்ற நோயாளிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,283ஆக அதிகரித்துள்ளது. 197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 471,060ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் சிகிச்சை பெற்ற மற்ற நோயாளிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியின் மோகன்புரியில் உள்ள கிளினிக்கைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து மார்ச் 12 முதல் 18 வரை அவரிடம் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றவர்கள், அவரிடம் தொடர்பில் இருந்தவர்களை டெல்லி அரசு கண்டறிந்து வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.