இந்தியா

கொரோனா எதிரொலி : 7 நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவை ரத்து

கொரோனா எதிரொலி : 7 நாடுகளுக்கான ஏர் இந்தியா சேவை ரத்து

webteam

கொரோனா வைரஸ் எதிரொலியால் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களை தடுத்து தனி இடங்களில் தங்க வைப்பதற்காக இந்தியா முழுவதும் 7 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக இரண்டாம் கட்டமாக ஈரானிலிருந்து 44 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மும்பை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸுக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் ரோபோ மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக கேரளா அரசின் ஸ்டார்ட் அப் மிஷன் திட்டத்தின் மூலம் இரு ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகார் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மார்ச் 22 வரை பள்ளிகள் இயங்காது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதேபோல் கர்நாடகா, ஒடிஷா, கேரளா, டெல்லி, ஜம்மு காஷ்மீரில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கான விமான சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. முன்னதாக குவைத்துக்கான விமான சேவையும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.