இந்தியா

கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு; அதிரடி முடிவெடுத்த நிறுவனம்..!

webteam

பெங்களூருவில் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது. எனினும், இந்த தொற்று நோய் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்ற ஆறுதலான செய்தியையும் அறிவித்திருக்கிறது.

இதனிடையே கடந்த ஜனவரி மாத இறுதியில் சவுதி அரேபியா சென்று பிப்ரவரி 29-ஆம் தேதி இந்தியா திரும்பிய 76 வயது முதியவர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான கல்புர்கிக்கு சென்றபோது, உயிரிழந்தார். இதனால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அவரது ரத்த மாதிரிகள் ஏற்கெனவே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில், கூகுள் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூகுள் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர்.