கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை சமாளிப்பது குறித்து ஐஎம்எஃப் நியமித்துள்ள ஆலோசனைக் குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் இடம்பெற்றுள்ளார்.
கொரோனாவால் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரம் சரிவை சந்திக்கவுள்ள நிலையில் இதை சமாளிப்பதற்கான கொள்கை முடிவுகளை ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியம் உருவாக்க உள்ளது.
இதற்காக ஆலோசனை கூற 11 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர் குழுவை ஐஎம்எஃப் அமைத்துள்ளது.இதில் தமிழரான ரகுராம் ராஜனும் இடம் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றிய இவர், தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ரகுராம் ராஜன் தவிர சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முக ரத்தினமும் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். இதற்கிடையில் பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகள் தேவைப்பட்டால் இந்தியாவிற்கு வந்து, பொருளாதார ஆலோசனைகள் வழங்க தயாராக இருப்பதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.