இந்தியா

கொரோனா : இந்தியாவில் உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு

webteam

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக இருந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று தாயகம் திரும்பிய 65 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி ஆனதால் நோய் பாதிப்பு அங்கு 101 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. முன்னதாக இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.