வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடிந்த அளவிற்கு நாடுமுழுவதும் எவ்வளவு பேருக்கு செலுத்தமுடியுமோ அதை செலுத்திமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பல்வேறு சோதனைக்கட்டங்கள் முடிந்தபிறகு அவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 13லிருந்து தடுப்பூசி போடும் பணியை நாடு முழுவதும் தொடங்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி நாடுமுழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகளை எப்படி கொண்டுசெல்வது, யார் யாரெல்லாம் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியல்களையும் மத்திய அரசு தயாரித்திருக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, மருத்துவத் துறை மற்றும் காவல்துறை, ராணுவத் துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
அதேபோல், கோவின் செயலிமூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்தவர்களுக்கும் ஜனவரி 13-ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கவேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து மாநில வாரியான விவரப் பட்டியல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.