இந்தியா

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து: பிரதமர் மோடி நம்பிக்கை

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து: பிரதமர் மோடி நம்பிக்கை

kaleelrahman

அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்து காணொலி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்றார். அகமதாபாத், புனே, ஹைதராபாத் நகரங்களில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பிரதமர் மோடி, இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.

பிரதமர் மோடி பேசும்போது, "இப்போது எட்டு தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்டப் பரிசோதனையில் உள்ளன. அவை இந்தியாவில் தயாரிக்கப்படும். அதில் மூன்று மருந்துகள் உள்நாட்டு மருந்துகளாக இருக்கும். இன்னும் சில வாரங்களில் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஞ்ஞானிகளின் ஒப்புதல் கிடைத்ததும் இந்தியாவில் தடுப்பு மருந்து அளிக்கும் திட்டம் தொடங்கப்படும். தடுப்பு மருந்தை முதலில் யாருக்கு அளிக்கலாம் என்பதை அடையாளம் காண்பதற்காக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தடுப்பு மருந்து அளிப்பதில் இந்தியாவுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. அனுபவமிக்க அலுவலர்களும், நெட்வொர்க் வசதியும் இருக்கிறது. கோரோனா தடுப்பு மருந்து அளிப்பதில் இந்த வசதிகளும், அனுபவங்களும் நமக்கு உதவிகரமாக இருக்கும். கூடுதல் குளிர்பதன வசதியையும், மருந்து சேமிப்பு தேவைகளுக்கான வசதிகளையும் உருவாக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்.

தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், தொழில்நுணுக்க நிபுணர்களைக் கொண்ட தேசிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, பிராந்திய அளவிலான தேவைகளுக்கு ஏற்ப இந்தக் குழு முடிவுகளை எடுக்கும்.

இந்தியர்கள் இந்தப் பெருந்தொற்று நோய்க்கு எதிராக மிகுந்த உறுதியுடன் செயல்பட்டார்கள். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்தியர்கள் தற்காப்பாக இருந்தது, தைரியம், பலம் ஆகியவை வேறு எவருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கும் இருந்தது.

நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியது மட்டுமின்றி, மற்ற நாடுகளின் குடிமக்களைக் காக்கவும் நாம் முயற்சிகள் எடுத்தோம். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறையால் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் நோய் பாதிப்பு விகிதம் குறைந்தது மட்டுமின்றி, கோவிட் நோயால் ஏற்படும் மரணங்களின் விகிதமும் குறைந்தது.

தடுப்பு மருந்து குறித்து வதந்திகள் பரவலாம். பொது மக்களுக்கும், தேச நலனுக்கும் எதிரானவையாக அவை இருக்கும். நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதுபோன்ற வதந்திகள் பரவாமல் தடுக்க அனைத்து தலைவர்களும் முன்வர வேண்டும்.

கோரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் மதிப்பு மிக்க பங்களிப்புகள் செய்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் யாரும் அலட்சியம் காட்டிவிடாமல், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சிவசேனா, டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி, எஸ்பி, அஇஅதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.