இந்தியா

பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம்!

JustinDurai

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு மாநிலங்களில் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 16) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தவுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும் தத்தமது பிராந்தியங்களில் தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்ட நிலையில், மருத்துவர் செந்தில் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் திட்டம் தொடங்கி சுமார் 5 மணி நேரம் ஆன நிலையில் கர்நாடாகா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   

மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்யும் கோ-வின் செயலியும் முறையாக இயங்கவில்லை. கோ-வின் செயலியில் ஒரே நேரத்தில் அதிகளவு பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய முயன்றதால் சிறிது நேரம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 3,000 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.