இந்தியா

கொரோனா அபாயம்: சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ரத்தப்பரிசோதனை

webteam

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்‌, சீனாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் ரத்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முதலாவது கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகரிலிருந்து வந்து சேருவோரிடம் உடனடியாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையிலுள்ள கிங் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். நோய் பாதிப்புக்கான அடையாளங்கள் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

சீனாவின் மற்ற பகுதிகளிலிருந்து வருவோர் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வருவோருக்கு நோய் அறிகுறிகள் இருக்கின்றனவா என சோதிக்கப்படும். அறிகுறிகள் தென்படுவோர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

இதுவரை ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சோதனைகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்திற்கு நெருக்கத்தில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.