இந்தியா

"25 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வழிவகை செய்க" - சோனியா வலியுறுத்தல்

sharpana

பெருந்தொற்று காலத்தில் தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நேரடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ம தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அவர்களின் வங்கிக்கணக்கில் மத்திய அரசு நேரடியாக 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை செலுத்தவேண்டும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கொரோனா பேரிடரை மத்திய அரசு திறம்பட நிர்வகிக்கவில்லை என சோனியா குற்றஞ்சாட்டினார். கொரோனாவை கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கேட்கும் உதவிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் சோனியா குற்றஞ்சாட்டினார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.