குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார்.
குஜராத்தில் கொரோனாவுக்கு இது இரண்டாவது உயிரிழப்பு ஆகும். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் மெல்ல, மெல்ல கூடுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதனிடையே, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 85 வயதுமிக்க மெக்காவில் இருந்து திரும்பிய பெண், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே சூரத் நகரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் குஜராத் மாநிலத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குஜராத்தில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 12ஐ எட்டியுள்ளது. முன்னதாக, மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.