இந்தியா

''எங்களுக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கள்'' - கொரோனாவைத் தடுக்க மணற்சிற்பம் சொல்லும் செய்தி

''எங்களுக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கள்'' - கொரோனாவைத் தடுக்க மணற்சிற்பம் சொல்லும் செய்தி

webteam

பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் கொரோனா விழிப்புணர்வு சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் என மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது கொரோனா எளிதாக தொற்றிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. முடிந்தவரை வெளிப்பயணங்களை தவிர்த்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் விழிப்புணர்வு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் வேண்டுகோள் விடுப்பதுபோல் அந்த சிற்பம் உள்ளது. அதில், ''உங்களுக்காக நாங்கள் வேலையில் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.