இந்தியா

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 415 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு : இந்தியாவில் 415 ஆக அதிகரிப்பு

webteam

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் நேற்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முதல் கொரோனாவுக்கு 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பிரதமர் மோடி கொரோனாவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அரசு கூறியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உங்களையும் குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.