கேரளா சிறுமி வன்கொடுமை
கேரளா சிறுமி வன்கொடுமை Twitter
இந்தியா

கேரளா: கடத்தப்பட்ட 5 வயது சிறுமி சடலமாக மீட்பு; பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

Angeshwar G

பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 4 வருடங்களாக கேரளாவில் வசித்து வந்துள்ளார். இத்தொழிலாளியின் 5 வயது மகள் நேற்று முன்தினம் (ஜூலை 28) மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளார். குழந்தையை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது. குழந்தையை கடத்தியது பீகார் மாநிலத்தை சேர்ந்த அஷ்பக் ஆலம் (Ashfaq Alam) என்பதும் தெரியவந்துள்ளது. அந்நபர் குழந்தையை பேருந்தின் மூலம் கடத்தி அழைத்து சென்றது சிசிடிவியால் அம்பலமானது.

கைதான அஷ்பக் ஆலம்

குழந்தையை தீவிரமாக தேடிய காவல்துறையினர் குற்றவாளியை விரைந்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே காணாமல் போய் 20 மணி நேரங்கள் கழித்து குழந்தையின் சடலம் ஆற்றங்கரையொன்றின் ஓரத்தில் சாக்குப்பையிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கலமசேரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து கேரள செய்தி நிறுவனங்கள், “குழந்தையின் முகம், கைகள், பிறப்புறுப்பில் மிக மோசமான காயங்கள் இருந்தன. குழந்தையின் கழுத்தும் தாக்கப்பட்டுள்ளது” என்றுள்ளன. பிரேத பரிசோதனையிலும் வன்கொடுமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவத்தில் இன்னும் பலர் ஈடுபட்டிருக்கலாமென்ற அடிப்படையில் காவல்துறை தொடர்ந்து விசாரித்தது.

கேரள ஊடகமான மனோராமா தெரிவிக்கும் தகவலின்படி, குற்றவாளி தன் நண்பரின் உதவியோடு பணத்துக்காக குழந்தையை கடத்தியுள்ளாரென்றும் தொடர்ந்து அவர் வேறொருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டாரென்றும் சொல்லப்படுகிறது. இதையொட்டி இன்னும் இருவர் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.

இருப்பினும் தற்போது அஷ்பக் ஆலம் மட்டும், 14 நாள்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது முதலில் சந்தேகப்பட்டாலும் அவர்களுக்கு குற்றத்தில் தொடர்பில்லை என தெரியவந்திருப்பதாக மாத்ருபூமி என்ற கேரள செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. அஷ்பக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 9 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் குழந்தை கடத்தப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அப்பகுதி எம்.எல்.ஏ அன்வர் (காங்.) தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மாநில முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ. எழுதியுள்ள கடிதத்தில், “இச்சம்பவத்தின் பின்னணியில் மோசடிக் கும்பலின் பங்கு உள்ளதென சந்தேகிக்கிறோம். இதை தனித்த ஒரு சம்பவமாகவும் குற்றமாகவும் கருதாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே, மக்களின் அச்சம் நீங்கும்.

வேறு மாநிலங்களில் இருந்து பணி செய்ய வரும் தொழிலாளர்களின் சான்றுகளை காவல்நிலையங்களில் வைத்திருக்க வேண்டுமென்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை காவல்துறையினர் பின்பற்றுகிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். கேரளாவின் பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன், “மாநிலத்திற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை” என குற்றம் சட்டியுள்ளார்.