இந்தியா

காலில் விழுந்து கதறியும் கருணை காட்டாத போலீஸ் அதிகாரி நீக்கம்!

காலில் விழுந்து கதறியும் கருணை காட்டாத போலீஸ் அதிகாரி நீக்கம்!

webteam

வயதான பெண் காலில் விழுந்து கெஞ்சியும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள குடம்பாவைச் சேர்ந்தவர் பிரம்மா தேவி (75). இவர் பேரன் ஆகாஷ் யாதவ். 20 வயதான ஆகாஷ் அருகில் உள்ள பிளைவுட் பேக்டரில் பணியாற்றி வந்தார். கடந்த 18 ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது, மெஷினில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து பேக்டரியின் உரிமையாளர் தலை மறைவாகிவிட்டார்.

இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இதையடுத்து பிரம்மா தேவி, போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அங்கு இன்ஸ்பெக்டர், தேஜ் பிரகாஷ் சிங் ஸ்டைலாக சேரில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தார். அவர் முன் நின் று, தனது பேரன் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய கோரினார். 

அந்த இன்ஸ்பெக்டர் அவரை கண்டுகொள்ளவில்லை. பிறகு கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்கக் கேட்டார். பிறகும் அவர் கண்டுகொள்ள வில்லை. பின் அவரது காலில் விழுந்து அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. 

வயதான பெண்மணி, கண்ணீர் விட்டு கதறியும் கண்டுகொள்ளாத அவருக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. இதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ள போலீஸ் துறை, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.