இந்தியா

அண்டர்கவர் ஆபரேஷன்! அஜித் பட பாணியில் மாணவிகளோடு மாணவியாக களமிறங்கிய பெண் போலீஸ்!

Sinekadhara

இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக்கல்லூரிக்கு வரும் முதலமாண்டு மாணவிகளை ரேக்கிங் செய்யும் சீனியர்களை கொத்தாக பிடிக்க ஃப்ரஷர் போல் நடித்து அண்டர்கவர் ஆபரேஷனில் ஈடுபட்டு 11 பேரை பிடித்துள்ளார் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்.

தாளாத ரேக்கிங் கொடுமை!

இண்டோரிலுள்ள எம்ஜிஎம் மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து சீனியர்கள் ஜுனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கியிருக்கும் ஃப்ளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். மேலும், வாட்ஸ்-அப்பில் மோசமாகவும் பேசியுள்ளனர்.

போலீசுக்கு சவாலாக மாறிய ரேக்கிங்

கடந்த 5 மாதங்களாக தொடர் புகார்கள் எழுந்துவந்த நிலையில், போலீசார் அந்த மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ரேக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களை பிடிப்பது போலீசாருக்கே சவாலாக இருந்திருக்கிறது. இந்நிலையில் 24 வயதான ஷாலினி சவுகான் என்ற இளம் கான்ஸ்டபிள் குற்றத்தில் ஈடுபடும் சீனியர்களை பிடிக்க மருத்துவக்கல்லூரி மாணவியாகவே களத்தில் இறங்கியுள்ளார். அவர் முதலாமாண்டு மருத்துவ மாணவியா அல்லது நர்ஸிங் மாணவியா என்று ஒருவருக்குக்கூட சந்தேகம் எழாத அளவிற்கு நடந்துள்ளார் ஷாலினி.

சந்தேகம் வராமல் களத்தில் இறங்கிய பெண் போலீஸ்

கிட்டத்தட்ட ஒருவாரம் கல்லூரி கேண்டீனிலேயே 5 முதல் 6 மணிநேரங்கள் அமர்ந்திருந்தாலும் பிறருக்கு சந்தேகம் எழாத வண்ணம், பிற மாணவிகளிடம் சகஜமாக பேசுவதும், புத்தகங்களை வைத்துக்கொண்டும், படிப்பாளிபோல் நடந்துகொண்டும் சீனியர்களை கண்காணிப்பதே தெரியாதவண்ணம் கண்காணித்து வந்துள்ளார். அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட சீனியர்கள் ஜூனியர் மாணவர்களை மோசமான செயல்களை செய்யச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

இதனை நேரடியாகச் சென்று பார்த்திருந்தால் குற்றவாளிகளை அடையாளம் கண்டிருக்கமுடியாது என்கிறது அறிக்கை. ஆனால் போலீஸும் மாணவிபோலவே இருந்ததால் சீனியர்கள் எந்தவித தயக்கமுமின்றி குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

போலீஸ் கான்ஸ்டபிளின் ஆய்வு மற்றும் தரவுகளின்படி, மொத்தம் 11 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். வியாழக்கிழமை அவர்களை சன்யோகிதகஞ்ச் காவல் நிலையத்திற்கு வரவழைத்து நோட்டீஸ் கொடுத்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்பின்னரே, இந்த வழக்கை கான்ஸ்டபிள் ஷாலின் எப்படி திறம்பட கையாண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்து எம்ஜிஎம் மருத்துவக்கல்லூரி மாணவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.