கேரளாவை உலுக்கிய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அம்ரூல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா. இவர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி, ஜிஷா தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டு கொலையாகி கிடந்தார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடைபெற்று 50 நாட்களுக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த குற்றவாளி அம்ரூல் இஸ்லாமை போலீசார் கைது செய்தனர். இவர் அசாமில் இருந்து வேலை தேடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளியின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொலைக் குற்றவாளி அம்ரூல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.