இந்தியா

’’அனுமார் பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ளது’’ - திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்தால் சர்ச்சை

’’அனுமார் பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ளது’’ - திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்தால் சர்ச்சை

Sinekadhara

அனுமார் பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ள நிலையில் அது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனுமார் கர்நாடக மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அனுமார் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக ஒரு புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் இப்புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த தகவலை தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்று கல்வியாளர்களும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஹம்பி பகுதியில் அனுமார் பிறந்தார் என்பதற்கு புராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்கள் முடிவை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.