பாகிஸ்தான் உடனான இந்தியாவின் சண்டை நிறுத்த ஏற்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது சமூகவலைதளங்களில் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
ஒருதரப்பினர் அமைதி முயற்சிக்காக ட்ரம்பை பாராட்டும் அதே வேளையில் ஒரு தரப்பினர் ட்ரம்பின் அறிவிப்பை விமர்சித்து வருகின்றனர்.
இது ஒரு புறம்இருக்க, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பாகிஸ்தான் விஷயத்தில் உதவி என்ற பெயரில்கூட எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று, 1971இல் அமெரிக்காவில் பேசிய காணொளிகள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகிவருகின்றன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆப்பரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரங்கள் அனைத்தும் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என்று தனது கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். கூட்டத் தொடர் நடத்துவதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் இந்த விவகாரங்கள் குறித்த தமது கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ராகுல் கூறியுள்ளார்.