ஜிதேந்திரா அவாத்
ஜிதேந்திரா அவாத்  pt web
இந்தியா

“ராமர் அசைவ உணவை உட்கொள்பவர்” - NCP தலைவரின் கருத்தால் சர்ச்சை; ”கொலை செய்வேன்” என சாமியர் மிரட்டல்!

Angeshwar G

உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களும் லட்சக்கணக்கில் அயோத்தியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராமர் கோவில் திறப்பினை முன்னிட்டு மஹாராஷ்ட்ரத்தில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு எழுதிய கடிதத்தில், ராமர் கோயில் திறப்பு நாளை அசைவ உணவுகள் இல்லாத நாளாக அனைத்தையும் தடை செய்யும் நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய சூழலில், ராமர் சைவ உணவாளர் இல்லை என்றும் சைவ உணவு உட்கொள்பவராக இருந்தால் அவரால் எப்படி 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ஜிதேந்திர அவாத், மஹாராஷ்ட்ராஷ்ட்ரத்தில் உள்ள ஷிர்டியில் நடைபெற்ற கட்சியின் ஆய்வு முகாமில் பேசுகையில், “நாங்கள் வரலாற்றை படித்துவிட்டு அரசியலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. ராமர் நம்முடையவர். அவர் பஹுஜன். ராமர் ஒரு போதும் சைவ உணவை உட்கொள்பவர் அல்ல. அவர் அசைவம் சாப்பிடுபவர். 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த ஒருவர் எப்படி சைவ உணவாளராக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராம் கதம், “பாலாசாகேப் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், சிவசேனாவின் சாம்னா நாளிதழ் ராமர் அசைவர் என்ற கருத்தை விமர்சித்திருக்கும். ஆனால், இன்றைய உண்மை என்னவென்றால், இந்துக்களை யாராவது கேலி செய்தால் அவர்கள் (உத்தவ் சேனா) கவலைப்படுவதில்லை. அவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால், தேர்தல் வரும்போது அவர்கள் இந்துத்துவா பற்றி பேசுவார்கள்.." என்று தெரிவித்துள்ளார். மேலும், ராமர் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதே அவர்களின் மனநிலை. வாக்குகளை சேகரிக்க இந்து மதத்தினை கேலி செய்திட முடியாது. ராமர் கோவில் கட்டப்படுவது கமந்தியா கூட்டணிக்கு பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

ராம் கதம் கருத்துக்கு பதிலளித்துள்ள அவாத், “ராமர் சத்திரியர். சத்திரியர்கள் அசைவ உணவை உட்கொள்பவர்கள். நான் கூறிய கருத்தில் நான் உறுதியுடன் இருக்கின்றேன். இந்திய மக்கள் தொகையில் 80% மக்கள் அசைவ உணவை உட்கொள்பவர்கள். அவர்கள் ராமர் பக்தர்களாகவும் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

அயோத்திய சீர் பரமன்ஸ் ஆச்சார்யா, “ஜிதேந்திர அவாத் கூறியது ராமர் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. ராமரை அவதூறாக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மகாராஷ்ட்ர மாநில மற்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் அவரை கொலை செய்வேன்” என தெரிவித்துள்ளார் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராமர் அசைவர் என்ற சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், வனவாசத்தின் போது ராமர் பழங்களை உட்கொண்டதாக சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஜிதேந்திர அவாத் சொல்வது தவறு. அவர் அசைவம் உட்கொண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. இப்படி பொய் சொல்பவருக்கு ராமரை அவமதிக்க உரிமை இல்லை” என தெரிவித்துள்ளார்.

பலரும் அவாத் கூறிய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜிதேந்திர அவாத் தனது கருத்துக்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பில், “என்னுடைய கருத்துக்கு நான் வருத்தத்தை தெரிவிக்கிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.