இந்தியா

திவ்யா (எ) ரம்யா மீது அவமதிப்பு வழக்கு

திவ்யா (எ) ரம்யா மீது அவமதிப்பு வழக்கு

webteam

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு பொறுப்பாளராக இருப்பவர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் நடிகர் சிம்புவின் குத்து, தனுஷின் பொல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர் பதவியை வழங்கினார் ராகுல் காந்தி. 

பல்வேறு விவகாரங்கள் குறித்து தன்னுடைய கட்சியின் நிலைப்பாடு, அவற்றில் உள்ள எதிர்ப்பு போன்றவற்றை சமூக ஊடகங்களில் கொண்டு சென்று சேர்ப்பதில் திறமைசாலியாக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தல் அறிவிப்புக்கு பின் மிக தீவிரமாக செயல்பட்டும் வருகிறார். இதற்கிடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வர முயன்றனர்.

தீர்மானம் குறித்து திவ்யா தனது ட்விட்டரில் சில கருத்துகளை பகிர்ந்திருந்தார். தலைமை நீதிபதியின் மேலுள்ள சில குற்றச்சாட்டுகளையும் அதில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவு செய்து திவ்யா களங்கம் ஏற்படுத்த முயல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அவமதிப்பு மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் கேட்டார். ஆனால் நீதிமன்றமோ மறுத்து விட்டது.