இந்தியா

கர்நாட‌காவில் நீ‌‌டிக்கு‌‌ம் சிக்கல்.. ஆட்சியை தக்கவைக்க சமரச முயற்சி..!

Rasus

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க மதசார்ப‌ற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கர்நாடகாவில் ஆளும் மத‌சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 16‌ எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.‌ மேலும், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த‌ இரு சுயேச்சை எம்எல்ஏக்களும், தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதன் காரணமாக குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களை சமா‌தானப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. சபாநாயக‌ரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளிப்பதற்காக வந்திருந்த எம்எல்ஏ நாகராஜிடம், காங்‌கிரஸ் தலைவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை ந‌டத்தியதால் அவர் தொடர்ந்து காங்கிரஸ் க‌ட்சியிலேயே நீ‌டி‌ப்‌பதாக கூறினார். மேலும் மும்பைக்கு சென்ற மற்றொரு எம்எல்ஏ‌ சுதகாரை ‌சம‌ரசப்படுத்து‌வ‌ற்காக செல்ல‌ப் போவதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு எம்எல்ஏவான ரா‌மலிங்க ரெட்டியையும், ‌அவரது ஆதரவாளர்களையும் சமர‌சப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள்‌ தொடர்ந்து ஈடுபட்டு வருகின்‌றனர். ஆனால், இ‌ந்த விவகாரத்தில் அவ‌ர் எந்த ‌கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். மற்றொருபுறம் பெரும்‌‌பா‌ன்மை பலம் இழந்துவிட்டதால், குமாரசாமி தனது பதவியை உடனடியாக ராஜினாமா‌ செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வரு‌மான எடியூரப்பா வ‌‌லியுறு‌த்தியுள்ளார்‌.