Sonia Gandhi - Raghul Gandhi ANI
இந்தியா

உ.பி. தேர்தல்.. இரட்டை வியூகத்தில் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கலா? பலன் தருமா மெகா ப்ளான்?

2027-ல் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில் அக்கட்சி இரட்டை அரசியல் வியூகத்தை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

செய்தியாளர் - ஷாலினி மூர்த்தி

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் சென்று அரசியல் ஆதரவைத் திரட்டும் களப் போராளியாகவும், பிரியங்கா காந்தி, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தி, கூட்டணிகளை ஒருங்கிணைக்கும் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் போடும் இந்த இரட்டை வியூகம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்கு என்ன? பார்க்கலாம்.

Sonia Gandhi - Raghul Gandhi-

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதனால், இங்கு கிடைக்கும் அரசியல் வெற்றி தேசிய அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 2027-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான போட்டியை உருவாக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் முக்கிய இலக்காக உள்ளது. உத்தரப் பிரதேச அரசியல் என்பது வெறும் தலைவர்களின் பிரசாரத்தை மட்டும் வைத்து முடிவாகிவிடுவதில்லை. சாதி அடிப்படையிலான வாக்குகள், உள்ளூர் செல்வாக்கு, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பு, கூட்டணிக் கணக்குகள் எனப் பல விஷயங்கள் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் ஜோடோ நியாய யாத்திரை, பொதுமக்களுடனான சந்திப்புகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் எனத் தொடர்ந்து மக்களிடம் நேரடியாகச் சென்று அரசியல் ஆதரவைத் திரட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் மூலம் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அரசியல் குரலாகத் தன்னை முன்னிறுத்துவது ராகுலின் அணுகுமுறையாக இருக்கிறது.

Sonia Gandhi - Raghul Gandhi

உத்தரப் பிரதேசத்திலும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி மக்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவைத் திரட்டுவது அவரது முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான உறவு இல்லை. இந்நிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு வியூகம் வகுத்து வருகிறது.

ராகுல் மக்களிடம் அரசியல் ஆதரவை உருவாக்கினால், அந்த ஆதரவைத் தேர்தல் வெற்றியாக மாற்றுவதற்காக, கட்சியின் அமைப்பு மற்றும் கூட்டணி அரசியலை ஒருங்கிணைப்பதில் பிரியங்கா காந்தி அதீத கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் சுமுகமான உறவைப் பேணுவது மிகவும் முக்கியமானது.

Legislative Council elections

ஏனென்றால், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான போட்டியை உருவாக்க வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து செயல்படுவது, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்கள் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி அளவிலான திட்டமிடல், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பொறுப்புகளில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிறுத்தும் மற்றொரு முக்கியமான விவகாரம் சாதிவாரி கணக்கெடுப்பு. இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதத்தை முன்னெடுக்க ராகுல் காந்தி விரும்புவதாகக் கூறப்படுகிறது. சமூக நீதி என்ற அரசியல் முழக்கத்தை முன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை ஒரே அரசியல் தளத்தில் கொண்டுவர காங்கிரஸ் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. 2027 உத்தரப் பிரதேசத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸின் இந்த இரட்டை வியூகம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் தேர்தல் வெற்றியாக மாறுமா என்பதை 2027 தேர்தல்தான் தீர்மானிக்கும்.

Congress

அதேநேரத்தில், காங்கிரசால் தனித்து களமாடி ஜொலிக்க முடியாது என்று கூறும் அரசியல் நிபுணர்கள், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் தேர்தல் முடிவுகள் அமையும் என்று கருதுகின்றனர்.