நடிகர் பிரகாஷ்ராஜ் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு பெங்களூரு தொகுதியை ஒதுக்குவது குறித்து பரிசீலிப்போம் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மத்திய நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அத்தொகுதி மக்களை நேரில் சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே பாஜகவையும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ்ராஜ், மதச்சார்பற்ற கட்சிகள் தமக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் மட்டுமே பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதரவு தரவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘பிரகாஷ் ராஜ் வைத்துள்ள கோரிக்கை குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கட்சித்தலைமையுடனும் விவாதித்தோம். எங்களை பொறுத்தவரை அவர் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு பெங்களூரு தொகுதியை வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’’ எனத் தெரிவித்தார்.