இந்தியா

பீகார் படுதோல்வியால் சலசலக்கும் காங்., வார்த்தை போர் புரியும் கபில்சிபல் - அசோக் கெலாட்!

பீகார் படுதோல்வியால் சலசலக்கும் காங்., வார்த்தை போர் புரியும் கபில்சிபல் - அசோக் கெலாட்!

Veeramani

பீகார் தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் கட்சித் தலைமை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பகிரங்கமாக விமர்சித்திருப்பதற்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 "ஊடகங்களில் நமது உட்கட்சி பிரச்சினையை பற்றி கபில் சிபல் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை, இது நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது" என்று அசோக் கெலாட் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். "எங்கள் சித்தாந்தம், திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கட்சித் தலைமையின் மீதான உறுதியான நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாங்கள் வலுவுடன் மீண்டுவந்தோம். மேலும் 2004 ஆம் ஆண்டில் சோனியாவின் திறமையான தலைமையின் கீழ் யுபிஏ அரசாங்கத்தை அமைத்தோம், இப்போதும்கூட நாங்கள் வெல்வோம் " என அவர் கூறியுள்ளார்

முன்னதாக கபில் சிபல் பீகார் தேர்தல் குறித்து பேசும்போது “அமைப்பு ரீதியாக எப்படி செயல்படுவது, எந்த வடிவத்தில் ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் விரும்பும் நபர்களை தேர்தலில் நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்ற பல நிலைகளில் நாம் பல விஷயங்களைச் செய்ய வேண்டும்"என்று கூறினார்" பீகார் படுதோல்வியையும் காங்கிரஸ் வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டுவிட்டதுபோலவே நினைக்கிறேன். காங்கிரஸின் சுயபரிசோதனைக்கான நேரம் முடிந்துவிட்டது. காங்கிரஸின் தொடர் தோல்விக்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும், காங்கிரஸ் தைரியமாக அவற்றை அங்கீகரிக்க தயாராக இருக்க வேண்டும்"  எனவும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு முழுமையான மோதலை ஏற்படுத்திய "கருத்து வேறுபாட்டுக் கடிதத்தின்" பின்னால் இருந்த 23 காங்கிரஸ் தலைவர்களில் கபில் சிபல் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.