இந்தியா

'நீதிபதிகளை மிரட்டும் விளையாட்டில் காங்கிரஸ்': அருண் ஜேட்லி விமர்சனம்

webteam

நீதிபதிகளை மிரட்டும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தீர்மானம் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க கோரி குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன. இதுதொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸூம், அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனத் தீர்மானத்தினை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்த துவங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். கண்டனத் தீர்மானத்தின் சக்தியினை இத்தகைய அற்பமான விஷயங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்தான சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார். இது நீதிபதிகளை மிரட்டும் ஒரு முயற்சி என்றும், இதர நீதிபதிகளுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கும் செயல் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தங்களோடு ஒத்துழைக்கவில்லை என்றால், 50 எம்.பி.க்கள் சேர்ந்தால் பழிவாங்கிவிடலாம் என்ற தகவலை நீதிபதிகளுக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதாகவும் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.