இந்தியா

எடியூரப்பா ஆடியோ விவகாரத்தில் அடுத்த திருப்பம் - சிறப்பு அமர்வு மூலம் விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை

webteam

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் வழக்கில் முதல்வர் எடியூரப்பாவின் புதிய ஆடியோ குறித்து விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

கர்நாடக காங்கிரஸின் கோரிக்கையை ஏற்பது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் ஆலோசனை பெறப்படும் என வழக்கை விசாரித்து வரும் அமர்வின் தலைவர் நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டிருந்த நேரத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அமித் ஷா அறிவுறுத்தலின்படி மும்பையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ பதிவு அண்மையில் வெளியாகியிருந்தது. 

மதசார்பற்ற சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களின் தியாகத்தால்தான் பாஜக ஆட்சியில் இருக்கிறது என்ற உண்மையை தங்கள் கட்சியில் சிலர் உணர மறுக்கின்றனர் என்ற பேச்சும் அதில் இடம் பெற்றிருந்தது. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கும்முன் இந்த ஆடியோ குறித்து விசாரிக்க சிறப்பு அமர்வை நியமிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வரும் 25ஆம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.