இந்தியா

காங்கிரஸ் 4ஆவது பட்டியல் வெளியீடு: திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும் போட்டி

காங்கிரஸ் 4ஆவது பட்டியல் வெளியீடு: திருவனந்தபுரத்தில் சசிதரூர் மீண்டும் போட்டி

webteam

மக்களவைத் தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் சசிதரூர் போட்டியிடுகிறார். 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் கட்சிகள் தீவிரமாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி, கடந்த 7 ஆம் தேதி 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியி ட்டது. இதில், சோனியா ரேபரேலி தொகுதியிலும், ராகுல் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 21 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது. அடுத்து அசாம், தெலங்கானா, மேகாலயா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 

இப்போது 27 தொகுதிகளுக்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை நேற்றிரவு வெளியிட்டது. அதில் கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதி களில் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

திருவனந்தபுரத்தில் சசிதரூர் போட்டியிடுகிறார். சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியில் ஆன்டோ அந்தோணி அறிவிக்கப் பட்டுள்ளார். எர்ணாகுளம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸ் மாற்றப்பட்டு தற்போதைய எம்எல்ஏவான ஹிபி ஈடனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபாம் துகி, அருணாச்சலப்பிரதேச மேற்கு தொகுதியில் களம் இறங்குகிறார். 

சத்தீஷ்கரில் 5 தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அந்தமான் தொகுதி யில் குல்தீப் ராய் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.