இந்தியா

சர்ச்சையை ஏற்படுத்தும் தேர்தல் பத்திர நடைமுறை.. பாஜகவை சாடிய காங்கிரஸ்..!

சர்ச்சையை ஏற்படுத்தும் தேர்தல் பத்திர நடைமுறை.. பாஜகவை சாடிய காங்கிரஸ்..!

webteam

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பணம் வசூலிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கு, ஊழல்வாதிகள் தூய்மையான அரசியலை விரும்பவில்லை என பாஜக பதிலடி தந்துள்ளது.

2017-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் அருண் ஜெட்லி, தேர்தல் பத்திர நடைமுறையை அறிமுகம் செய்தார். இதன் மூலம் அரசியல் கட்சிகள் தனியாரிடமிருந்து பணம் பெற்றன. 2018-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக விற்பனையான 222 கோடி ரூபாயில், 95 விழுக்காட்டை ஆளும் பாஜக பெற்றதாக ஜனநயாக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்களை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய ரிசர்வ் வங்கியிடம், மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை கேட்டதாக தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோத பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் தவறான முன் உதாரணம் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், பணம் அளித்தவர் யார் என்பதை அடையாளம் காணமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இப்பிரச்னையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பிய காங்கிரஸ் கட்சி, இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றார். நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார். 

காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, ஊழல்வாதிகள் தூய்மையான அரசியலை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், நேர்மையானவர்களின் பணம் அரசியல் கட்சிகளுக்கு செல்வதை விரும்பவில்லை எனக் குற்றம்சாட்டினார். இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் பெயரை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையப் பரிந்துரைப்படி, மோடி அரசு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலின் போது, அதிக அளவில் கருப்புப்பணத்தை பயன்படுத்தியதாகவும், காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ததாகவும் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர நடைமுறை, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.