இந்தியா

வெளி மாநிலத்தவர்கள் ஊர் திரும்பும் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும் - சோனியா காந்தி

வெளி மாநிலத்தவர்கள் ஊர் திரும்பும் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கும் - சோனியா காந்தி

PT

ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சிகள் ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் சென்ற தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் வருமானமிழந்து உணவின்றி தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால், அவர்களை இலவசமாக  பயணம் மேற்கொள்ள அனுமதிக்காமல், வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவரது சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ்  கட்சி ஏற்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே தொழிலாளர்கள்தான்.

அவர்களின் உழைப்பும் பங்களிப்புதான் இந்தியா நாட்டின் அஸ்திவாரம். 1947 க்கு பிறகு இந்தியா இப்படி ஒரு பெரிய விபத்தை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே வந்துள்ளனர். அவர்கள் அப்படி வந்ததற்கு காரணம் தன் அன்புக்குரியவர்களை காண வேண்டும் என்பதுதான்.

இன்றும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் நடைபாதையாகவே அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட மத்திய அரசும் ரயில்வே துறையும் அவர்களிடம் கட்டணம் வசுலிக்கிறது. ஆகவே ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு அவர்களுக்கு உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் அவரவரது சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும். அவர்களின் தோளோடு தோள் நிற்க காங்கிரஸ் கட்சி அளிக்கும் தாழ்மையான பங்களிப்பு இது” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.