eci, congress x page
இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல்|”இதெல்லாம் சந்தேகமா இருக்கு” - குளறுபடிகளை கவனிக்க தேர்தல் ஆணையத்தில் காங். மனு!

மகாராஷ்டிரா தேர்தல் குளறுபடிகளை கவனிக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அவசர மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நிரஞ்சன் குமார்

காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் நானா படேல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ரமேஷ் ஜென்னிதாலா முகுல் வாஸ்னிக் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் 12 பக்கங்களைக் கொண்டு விரிவான புகார் மனுவை வழங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டது அல்லது சேர்க்கப்பட்டது ஆகியவை முக்கிய விஷயமாக இருக்கிறது.

குறிப்பாக கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் சராசரியாக 50,000 வாக்காளர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 தொகுதிகளில் ஆளுங்கட்சி அல்லது அவர்களது கூட்டணி கட்சிகள் வெற்றியைப் பெற்றுள்ளனர். இவையெல்லாம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது விஷயம், மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலை 5 மணி வரை 58.22% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இரவு 11:30 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு விவரங்களில் 65.02% அதிகரித்துள்ளது. கடைசி மணி நேரங்களில் எப்படி இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி இருக்கும் எனக் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.